ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

18-11-2018- மீனம்.

20-11-2018- மேஷம்.

22-11-2018- ரிஷபம்.

24-11-2018- மிதுனம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: விசாகம்- 4, அனுஷம்- 1, 2.

செவ்வாய்: சதயம் 2, 3.

புதன்: விசாகம்- 2, 1.v குரு: அனுஷம்- 2, 3.

சுக்கிரன்: சித்திரை- 4.

சனி: மூலம்- 2, 3.

ராகு: பூசம்- 1.

கேது: உத்திராடம்- 3.

கிரக மாற்றம்:

புதன் வக்ரம், அஸ்தமனம்.

23-11-2018- புதன் உதயம்.

24-11-2018- புதன் வக்ரநிவர்த்தி.

குரு அஸ்தமனம்.

சுக்கிரன் வக்ரம்.

24-11-2018 சுக்கிரன் வக்ரநிவர்த்தி

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் ராகுவின் சாரத்தில் (சதயம்) கும்பத்தில் இருக்கிறார். வாரத் தொடக் கத்தில் சதயம் 2-ல்- நவாம்சத்தில் மகரத்தில் உச்சம டைவார். அதனால் குரு 8-ல் மறைந்த தோஷம் விதிவிலக் காகும். மேலும், 10-க்குடைய சனி 9-ல் நிற்பதும் தர்மகர் மாதிபதி யோகமாகும். அதுவும் உங்களுக்கு கெடுதல்கள் நெருங்காதபடி பாதுகாப்பு அரணாக விளங்கும். 5-க்குடைய சூரியனும் 8-ல் மறைந்தாலும் பாக் கியாதிபதி குருவோடு சம்பந்தம். உங்களுடைய எண்ணங்களும் லட்சியங்களும் திட்டங்களும் ஈடேற சிற்சில குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்பட்டாலும், உங்களுடைய விடாமுயற்சியாலும் வைராக் கியத்தாலும் முடிவில் வெற்றியடையும். இதைத்தான் வள்ளுவர் "எண்ணிய எண்ணி யாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்றார், இதற்கு உதாரணம் விஸ்வா மித்திரர்தான். கௌசிக மன்னர், வசிஷ்டரின் காமதேனு பசுவைக் கவர (களவாட) முயற்சிக்க, மன்னரின் பெரும்படையைத் தோற்கடிக்குமளவு காமதேனு பெரும் படைவீரர்களை உருவாக்கியது. இது எதனால் என்று அமைச்சரிடம் கேட்டு "தவப்பயன்' என்பதை அறிந்து, கௌசிகர் ராஜ்ஜியத்தைத் துறந்து தவம் மேற்கொண்டார். மேனகை யாலும், திரிசங்குவாலும் அவரின் தவப் பயன் குறைய, மீண்டும் மீண்டும் தவம்புரிந்து சாதனை படைத்து, தன் காயத்தை (தேகத்தை) திரியாக்கி தீபமேற்றி விசுவாமித் திரர் ஆகி, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார்; காயத்திரி மந்திரத்தை உருவாக்கினார். குரு 8-ல் மறைவதால் குறுக்கீடுகள் உருவானாலும் அவற்றைக் கடந்து முன்னேறி நினைத்ததை நிறை வேற்றலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ஆறில் மறைந் தாலும் ஆட்சிபெறுவதால் தோஷம் நீங்கும். அவருடன் 2, 5-க்குடைய புதனும் மறைந் தாலும், புதனும் சுக்கிரனும் வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். அதைவிட சிறப்பு 8, 11-க்குடைய குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான (தர்மகர்மாதிபதியும்கூட) சனியின் சாரத்தில் புதன் இடம்பெறுவதால், உங்கள் குடும்பம், பொருளாதாரம் இவற்றில் எந்த குறையும், பாதிப்பும் ஏற்படாது. ரிஷப ராசிக்கு அட்டமச்சனி அவ்வப்போது சிறுசிறு இடையூறுகளை உருவாக்கினாலும் தடைகளைக் கடந்து உங்கள் வெற்றிப் பயணம் தொடரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான சிக்கல்கள் தீரும். வரவேண்டிய காசு பணம் வந்துசேரும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். யோகம் தேடிவரும். 3-ல் உள்ள ராகு "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்பதுபோலவும், "இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா' என்பதுபோலவும் துணிவோடு செயல்பட்டு, வெற்றிமேல் வெற்றிதேடி வாகைசூடுவீர்கள். 8-ஆம் இடத்து சனி, வீடு அல்லது பதவி அல்லது செய்தொழில் அமைப்புகளில் மாறுதலை ஏற்படுத்தலாம். அந்த மாறுதலும் ஆறுதலான மாறுதலாகப் பயன் தரும்; பலன் தரும்! மாற்றம் ஏற்றம் பெறும்! அதாவது இடப்பெயர்ச்சிக்கு இடம் உண்டாகும். அது வளர்ச்சிக்கு அஸ்திவாரம் அமைக்கும். எதிர்பாராதவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. சிலர் வேலை விஷயமாகவோ தொழில் விஷயமாகவோ கடல் கடந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். வெளிநாடு அல்லது வெளியூர் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.

iyappan

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 5-ல் 7, 10-க்கு டைய குருவின் சாரம் பெறுகிறார். ராசிநாதனோ லக்னநாதனோ திரிகோணம் பெற்றாலும், கேந்திரம் பெற்றாலும் நினைத்தது நிறைவேறும். சாதனைகள் படைக்கலாம். வேதனைகளை விலக் கலாம். சோதனைகளைக் கடக்கலாம். அதேபோல குருவின் சாரம் பெற்றாலும், குருவின் சம்பந்தம் பெற்றாலும் நல்லதே நடக்கலாம். "நல்லாரைக் காண்பதும் நன்று- நல்லார் சொல் லைக் கேட்பதும் நன்று- நல்லாரோடு இணைந் திருப்பதும் நன்று' என்பது ஆன்றோர் வாக்கு. குரு எந்த ஆதிபத்தியம் பெற்றாலும் நல்லவர் தான். அது கங்கைக்குச் சமம். கங்கையோடு சாக் கடை சங்கமமானாலும் அதன் புனிதத்தன்மை கெடுவதில்லை. அதேபோல தேன் தானும் கெடாது; தன்னோடு சேர்ந்த பொருளையும் கெடவிடாது. அதற்குச் சமம் குரு- நல்லவர் என்பதுதான். 2-ல் ராகு, 8-ல் கேது. 8-க்குடைய சனி 7-ல் என்பதாலும், 7-க்குடைய குரு 6-ல் என்ப தாலும் சிலருக்கு திருமணத்தடையும் தாமதமும் ஏற்படலாம். பெண்கள் 23 வயதுக்குள்ளும், ஆண்கள் 25 வயதுக்குள்ளும் திருமணம் செய்து கொண்டால் (சனி தோஷமும் நாகதோஷமும் இருப்பவர்களுக்கு) திருமண முறிவும், மறுமண யோகமும் ஏற்படலாம். அதேபோல 8-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டால் வாரிசு இருக்காது அல்லது களஸ்திர தோஷம் ஏற்படலாம் அல்லது விவாகரத்து ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் 8-ஆம் தேதி கட்டிய மாங்கல்யத்தை தெய்வக்கோவில் உண்டியலில் செலுத்திவிட்டு 1, 3, 6 வரும் தேதிகளில் மறுமாங்கல்யம் அணிவிக்க வேண்டும். ஜனன ஜாதகத்திலும் இதேபோல சனி தோஷமும் நாகதோஷமும் இருப்பவர்கள் சூலினிதுர்க்கா ஹோமமும், சனி சாந்தி ஹோமமும் செய்வ தோடு, ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்துகொள்ள வேண்டும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் ஜென்ம ராகு நிற்பது தோஷம் என்றாலும், குரு 5-ல் நின்று ராகுவைப் பார்ப்பதால் தோஷம் விலகும். மேலும் குரு 9-க்குடைய திரிகோணாதிபதி, 5-ஆம் இடத்தில் மற்றொரு திரிகோணத் தில் நிற்பது யோகம். அதனால் குரு வருளும் திருவருளும் உங்களுக்குத் துணையாக அமைந்து வழிநடத்தும். ஆகவே உங்கள் எண்ணங்கள் ஈடேறும். திட்டங்கள் வெற்றியடையும். கருதியவை கைகூடும். 10-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்து, செவ்வாய்க்கு வீடு கொடுத்த சனி 6-ல் மறைந்து செவ்வாயைப் பார்ப் பதால் விபரீத ராஜயோகம் அமையும். சிலசமயம் சில இழப்புகளும் நஷ்டங் களும் ஏற்பட்டாலும், அதற்கு பதிலாக இரட்டிப்பு லாபமும் நன்மையும் அடை யலாம். அதற்கு உதாரணம் மதுரையில் நடந்த நிகழ்வொன்று. திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட பிரபலமானவரை செல்பி எடுக்க ஒரு அன்பர் முயன்றபோது அதை அந்த பிரபலம் தட்டிவிட செல்போன் உடைந்துவிட்டது. இது மீடியாக்களில் எல்லாம் பிரபலமானவுடன் அவரைச் சார்ந் தவர்கள் உடைந்த செல்போனிற்கு பதிலாக புதிய செல்போன் வாங்கித் தந்துவிட்டார்கள். அந்த அன்பர் முன்பு வைத்திருந்த செல் போனைவிட அதிக தொகை மதிப்புள்ள செல் போன் கிடைத்தது. அதேபோல மதுரை அரசியல்வாதிக்கு எம்.எல்.ஏ. சீட்டுக்கு பதிலாக வேறொரு நபருக்கு எம்.எல்.ஏ. சீட்டு கிடைத்தது. சீட்டு கிடைக்காதவருக்கு மதுரை மேயர் பதவி கிடைத்தது. ஆக ஒன்றை இழந்தால் இன்னொன்றைப் பெறலாம் என்பது விதி. குரு பார்வையின் பலனாக இழந்ததைவிட உயர்ந்தது கிடைக்கும் என்பது விதி.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 4-ல் கேந்திரம் பெற அவருடன் 5, 8-க்குடைய குரு சம்பந்தம். அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க் கிறார். "ஒன்று நினைக்கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்; அன்றி அது வரினும் வந்தெய்தும்' என்று ஒரு பாடல் உண்டு. அதுபோல நீங்கள் எதிர்பார்த்தது ஏமாற்றமானாலும், அதைவிட நன்மையானதும் அனுகூலமானதுமான வேறொன்று வந்த டையும். அது எதிர்பார்த்ததைவிட உயர்ந்த தாகவும் சிறந்ததாகவும் அமையும். அதைத் தான் பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது' என்றார். ஆகவே, கிடைக்காததை நினைத்து வருந்த வேண்டாம். அதைவிட சிறப்பானது கிடைக்கும். அது வந்தபிறகுதான் அருமை பெருமை தெரியும். இதுதான் 5-ல் உள்ள சனியின் பலன். 8-ஆம் இடம் ஏமாற்றம். 5-ஆமிடம் அதிர்ஷ்டம் (யோகம்). 12-ல் ராகு நிற்பதால் வெளியூர், வெளிநாட்டு வாய்ப் புகள் தேடிவரும். அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தசாபுக்தி சாதகமாக இருந்தால் எல்லாம் யோகமாகவே அமையும். 2, 11-க்குடையவர் 3-ல், 3-க்குடைய சுக்கிரனோடு சம்பந்தம். சகோதரர்களாலும் சகோதரி களாலும் அல்லது நண்பர்களாலும் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். உதவிகள் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு கணவன் அல்லது மனைவியால் யோகம் உண்டாகும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கு 4-ஆமிடத்து சனி அர்த் தாஷ்டமச்சனி நடக்கிறது. உங்கள் ராசியை 8-க்குடைய செவ்வாயும் பார்க்கிறார்; 6-க்குடைய சனியும் பார்க்கிறார். 6, 8-க்குடைய சம்பந்தம் இருப்பதால் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக எல்லாம் எதிர்மறையாக நடக்கும். ஏட்டிக்குப் போட்டியாகவும் நடக்கும். 2-ல் 10-க்குடைய புதனும், 9-க்குடைய சுக்கிரனும் இணைந்திருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. எனவே உங்களுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். சில காரியங்களில் ஏமாற்றம், தோல்வியாகத் தெரிந்தாலும் கடைசியில் அதுவும் ஒரு நன்மைக்காகவே அமையும். அதன் ரகசியம் ஆரம்பத்தில் தெரியாது. நடந்து முடிந்தபிறகுதான் தெரியும். ஒரு மாணவன் பரீட்சைத் தேதியை மாற்றி குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தான். அதனால் பரீட்சை நடந்த அன்று அதில் கலந்துகொள்ளவில்லை. சக மாணவர்கள் பரீட்சை முடிந்து அவனை வந்து பார்த்து ஏன் வரவில்லை என்றபோதுதான் மறுநாள் அந்த பரீட்சை என்று எழுதி வைத்திருந்த தவறு புரிந்தது. மிகவும் வேதனைப்பட்டான். ஆனால் அன்று நடந்த தேர்வில் வினாத்தாள் வெளியாகிவிட்டது என்று பள்ளி நிர்வாகம் அந்த தேர்வையே ரத்து செய்துவிட்டது. பரீட்சை எழுதாத மாணவனுக்கு வருத்தம் நீங்கி மறுபடியும் எழுதும் சந்தர்ப்பம் வரும் என்று மனநிறைவு ஏற்பட்டது. இப்படி பல அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்படலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் பாக்கியாதிபதி புதனும் சேர்க்கை. எனவே உங்களுடைய செயல்களிலும் திட்டங் களிலும் எந்தக் குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் அவற்றை முறியடித்து முன்னேறலாம், வெற்றி பெறலாம். குடும்ப ஸ்தானத்தில் சூரியனும் குருவும் கூடியிருப்பதால்- குரு 6-க்குடையவர் என்பதால் அவ்வப்போது சில சிறு எதிர்ப்பு, இடையூறுகள் ஏற்பட்டாலும், அவை கருத்து எதிர்ப்பே தவிர, காரிய முறிவுக்கோ தடைக்கோ இடம் ஏற்படாது. எண்ணிய காரியங்கள் எண்ணியவாறே இனிதே ஈடேறும். தனகாரகன் குரு தன ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதார நெருக்கடிக்கு இடம்வராது. தேவைப்படும் நேரத்தில் தேவைக்கேற்ற பண வசதி தாராளமாக அமையும். உதாரணமாக கரன்டு பில், ஸ்கூல் பீஸ், வாடகைப்பணம் போன்ற அத்தியாவ சியத் தேவைகளுக்கு எப்படியோ பணம் புரளும். சொந்த வீட்டில் இருப்போருக்கு வீட்டுவரி போன்ற தேவைகளுக்கும் பணம் புரளும். 3-ல் உள்ள சனியால் உடன்பிறப்புகள் வகையில் நல்லதும் நடக்கும்; கெட்டதும் நடக்கும். ஆதரவும் இருக்கும்; எதிர்ப்பும் இருக்கும். என்றாலும் அவற்றை எளிதாக சமாளிக்கும் புத்திசாலிலித்தனமும் இருக்கும். 2, 7-க்குடைய செவ்வாய் 5-ல் நின்று, அவருக்கு வீடு கொடுத்த சனியால் பார்க்கப்படுவதால் பிள்ளைகள் வகையில் நல்ல காரியம் நடை பெறும். மகப்பேறு, திருமணம், காதணி விழா, பள்ளியில் சேர்க்கை போன்ற நல்ல காரியங் கள் நீங்கள் விரும்பியபடி விரைவாக நிறை வேறும். 4-ல் உள்ள கேது தாயார் அல்லது உங்கள் ஆரோக்கியத்துக்கு சிலசமயம் பிரச் சினைகளை உருவாக்கலாம். அதைத் தவிர்க்க விநாயகர் வழிபாடு செய்யலாம். தினசரி விநாயகர் கவசம் பாராயணம் செய்யலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 4-ல் இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த சனி 2-ல் நின்று அவரைப் பார்க்கிறார். பொதுவாக செவ்வாய்- சனி பார்வையோ சேர்க்கையோ இருந்தால் கெடுபலன் நடக்கும் என்பது ஜோதிட விதி. எந்த ஒரு விதி என்றாலும் அதற்கு விதிவிலக்கு என்றும் ஒன்று உண்டல் லவா! செவ்வாயோ சனியோ ராசிநாதனா கவோ அல்லது லக்னநாதனாகவோ அமைந் தால் செவ்வாய்- சனி சம்பந்தம் கெடுதலைச் செய்யாது. ஒருவழிப்பாதையில் (நோ என்ட் ரியில்) தீயணைப்பு வாகனமும், ஆம்பு லன்ஸும் போகலாம். போலீஸ் வாகனமும் போகலாம் அல்லவா? அத்துடன் செவ் வாய்க்கும் சனிக்கும் குரு சம்பந்தம் இருந் தாலும் பாதிக்காது. இதெல்லாம் விசேஷ விதிவிலக்குகள்! 3-ல் உள்ள கேதுவும், அதைப்பார்க்கும் ராகுவும் உடன்பிறப்புகள் வகையிலோ அல்லது வேலை, தொழில், பதவி வகையிலோ பிரச்சினைகளை உருவாக்கலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக நடந்தால் அவற்றை எளிதாகக் கடந்துவிடலாம். இல்லை யென்றால் குடை இல்லாமல் போகும்போது மழைபெய்து தலையை நனைப்பதுபோல சில அசம்பாவிதங்கள் நடக்கலாம். மழையில் நனைவதால் ஜலதோஷம் பிடிக்கும். காய்ச்சல் வரும். சளித்தொல்லை போன்ற பக்க விளைவுகள் (சைடு எபக்ட்) வர இடமுண்டாகு மல்லவா! தசாபுக்திகளை அனுசரித்துத் தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. நோய்க்கு மருந்து இருப் பதுபோல எல்லாப் பிரச்சினைகளுக்கும் பரிகாரம் உண்டு. பரிகாரம் இல்லாத பிரச் சினை மரணம் ஒன்றுதான். அதையும் ஆயுஷ் ஹோமம் செய்து தள்ளிப்போடலாம். தள்ளிப் போடலாமே தவிர தவிர்க்கமுடியாது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு தன் ராசிக்கு 12-ல் மறைவு. அவருடன் பாக்கியாதிபதி சூரியனும் சேர்ந்து மறைவு. அத்துடன் ஜென்ம ஏழரைச் சனி வேறு நடக்கிறது. இவையெல்லாம் உங்களுக்கு எதிர்மறையான கிரக அமைப் புகள். என்றாலும் உங்களுடைய எண்ணம், செயல்பாடு, வழிபாடு மூலமாகத் தவிர்க்க லாம். மாற்றி அமைக்கலாம். அப்பர் சுவாமி களும் ஞானசம்பந்தப்பெருமானும் வேதா ரண்யத்தில் இருக்கிறார்கள். அப்போது சம்பந்தருக்கு மதுரைக்கு வருமாறு ஓலை வருகிறது. சம்பந்தர் மறுநாளே புறப்படுவதாக் கூறுகிறார். அப்பர் சுவாமியோ, "நாளை திருவாதிரை நட்சத்திரம், பயணத்துக்கு ஆகாத நாள். அக்னி பயம் உண்டாகும்' என்கிறார். அப்போதுதான் சம்பந்தர், "ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்று "வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் உளமே புகுந்துள்ளான்' என்று விளக்கு கிறார். நள்ளிரவில் மடத்தில் உறங்கிய சம்பந்தரை உடனே தன் சந்நிதிக்கு வரும்படி சொக்கநாதர் ஆணையிட, சீடர்கள் யாருக்கும் தகவல் தராமல் கோவிலுக்குப் போய்விடு கிறார். சமணர்கள் சம்பந்தர் தங்கியிருந்த குடிலுக்குத் தீவைத்துவிடுகிறார்கள். "ஆதிரைக்கு அக்னி பயம்' என்ற ஜோதிட விதியும் பொய்யாகவில்லை. சொக்கநாதப் பெருமான் சம்பந்தரை ஆபத்திலிலிருந்து காப் பாற்றினார் என்பதும் பொய்யாகவில்லை. அதுபோல ஒன்பது கிரகங்களும் உங்களுக்கு எதிர்மறையாக செயல்பட்டாலும் உள்ளத் தில் உறையும் இறைவனை நம்புங்கள். அவன் உங்களுக்குப் பாதுகாப்பாக இருந்து காப் பாற்றுவான். காலைக் கவ்விய முதலையிட மிருந்து கஜேந்திரன் என்ற யானையைப் பெருமாள் ஓடிவந்து காப்பாற்றவில்லையா? உள்ளமுருக, தெள்ளத்தளிவாக, கள்ள மில்லாமல் நம்பிக்கையோடு அழைத்தால் தெய் வம் ஓடோடிவந்து உதவும்போது ஏழரைச் சனி என்ன செய்யும்? ராகு- கேது என்னசெய்யும்?

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைகிறார். அவருக்கு வீடு கொடுத்த குரு அதற்கு 12-ல் மறைகிறார். அத்துடன் ஜென்மத்தில் கேது அமர்வு! இவையெல்லாம் "லோபிக்கு இரு செலவு' என்ற பழமொழிபோல தேவையற்ற விரயங்களைத் தரும் சூழ்நிலை. கஞ்சன் ஒரு பொருளை வாங்க கடைக்குப் போனான். கடைக்காரன் சொன்ன விலையில் பாதியைக்குறைத்துக் கேட்க, கடைக்காரன் தரவில்லை. வேறு நாலைந்து கடைக்குச் சென்று விசாரித்தான். முதலிலில் சொன்னவனே சகாயமாக உள்ளது என்று திரும்பவந்து கேட்கும்போது, அவன் கேட்ட பொருள் விற்றுவிட்டது. வேறுவழியில்லாமல் கூடுதல் விலைகொடுத்தே தேவையான பொருளை வாங்கிச்சென்றான். இதைத்தான் "லோபிக்கு இரு செலவு' என்பார்கள். "நனைஞ்சு சுமப்பது' என்பதும் இதுதான். என்றாலும் 10-ல் புதனும் சுக்கிரனும் கூடியிருப்பது தர்மகர்மாதிபதி சேர்க்கையாகும். புதன் 9-க்குடையவர். சுக்கிரன் 10-க்குடையவர். அதனால் உங்களை எந்த ஆபத்தும் அணுகாது. போலீஸ் கைதுசெய்ய வரலாம் என்ற நிலையில் "முன்ஜாமின்' வாங்கித் தப்புவதுபோல தர்மகர்மாதிபதி யோகம் உங்களைக் காப்பாற்றும். அதனால் விரயங் கள் ஏற்பட்டாலும் அது பயனுள்ள, பலனுள்ள சுபவிரயமாகலாம். அதேபோல தொழில் வகையில் அல்லது குடும்பத்தில் மனைவி வகையில் வரும் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்துவிடலாம். குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் ஏற்பட 7-ஆம் இடத்தையும், 7-ல் உள்ள ராகுவையும் குரு பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை!

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று தன் ஸ்தானத்தைத் தானே பார்க்கிறார். 3, 6, 11-ஆம் இடங்கள் சனிக்கு நற்பலன்கள் தரும் இடமாகும். சனி குருவின் வீட்டில் நிற்க, குரு செவ்வாயின் வீட்டில் நிற்க, செவ்வாய் சனியின் வீட்டில் நிற்பதால் செவ்வாய், சனி, குரு மூவருக்கும் ஒரு இணைப்புப்பாலம் ஏற்படுகிறது. அதனால் மேன்மேலும் உங்களுக்கு அனுகூலமான பலன் உண்டாகும் என்று நம்பலாம். 3, 10-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் நிற்பதால் வாழ்க்கை, தொழில் வகையிலும் உங்களுக்கு நல்லவை நடக்கும். உடன்பிறந்த வகையிலும் நல்லவை நடக்கும். 2, 11-க்குடைய குரு 10-ல் இருப் பதாலும், 7-க்குடைய சூரியன் சம்பந்தப் படுவதாலும் அரசு வேலைக்கு முயற்சிப் போருக்கு அரசு வேலை கிடைக்கும். ராஜாங்க விவகாரங்கள் இருந்தால் பிரச்சினைகள் தீர்வாகும். ஓய்வுபெற்ற அரசு உத்தியோகஸ் தர்களுக்கு வரவேண்டிய பி.எப்., பென்ஷன் எல்லாம் வந்துசேரும். புதிய தொழில் தொடங் கலாம். சிலர் மனைவியின் பெயரில் தொழிலில் கூட்டுசேர்க்கலாம். அல்லது தொழிலில் ஆரம்பிக்கலாம். ஒருசிலருக்கு மனைவி வகை யிலிருந்து சொத்துசுகங்கள், பங்குபாகங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. களஸ் திரகாரன் சுக்கிரனும், 5-க்குடைய புதனோடு சேர்ந்திருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டம் மனைவிக்கு வந்துசேரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவான நிலை உண்டாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் இருக்கிறார். தன் ராசியைத் தானே பார்க்கிறார். அது உங்களுக்கு சம்பளப்பணம் போக தீபாவளி போனஸ் கிடைத்த மாதிரி! "அகப்பட்டவனுக்கு அட்டமத்துச்சனி; ஓடிப்போனவனுக்கு 9-ல் குரு' என்பது பழமொழி. 9-ல் குரு நிற்பது குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்து வதற்குச் சமம். இன்றைய கலிலியுகத்தில் ஒன்று படைபலம் வேண்டும் அல்லது பணபலம் வேண்டும். இந்த இரண்டும் இல்லாதவர்க்கு தெய்வபலம் இருந்தால் போதும்; எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். பணபலத்தாலும் படைபலத்தாலும் அரசு பலத்தாலும் அப்பர் சுவாமிகளைக் கட்டிக் கடலிலில் போட்டபோது "நற்றுணையாவது நமசிவாயவே' என்று பாடித் தப்பித்தார். அதேபோல கொடிய விஷப்பாம்பை ஏவித் தீண்டவைத்தபோதும், சுண்ணாம்புக் காளவாசலிலில் தூக்கிப்போட்டபோதும் பிரகலாதனை நாராயணன் காப்பாற்றி உயிர்பிழைக்கச் செய்தார். மகனுக்குக் கெடுதல் நினைத்த தகப்பன் இரணியனை நரசிம்மர் வதம்புரிந்தார். ஆகவே 9-ல் உள்ள குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிரிகளிடமிருந்தும், போட்டி பொறாமை களிலிலிருந்தும், கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு போன்ற பாதிப்புகளிலிருந்தும் நீங்கள் நம்பும் தெய்வம் உங்களைக் காப்பாற்றும். அதற்கு தெய்வத்தை முழுமனதோடு நம்பவேண்டும். நம்பினோர் கைவிடப்படார்.